JUNE 10th - JULY 10th
சாக்கடையே சந்தனமாய் ...
செண்பகா
நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த, விடுதியுடன் கூடிய பிரசித்தமான அந்த பள்ளியின் மைதானம் வெறிச்சோடிக் கிடந்தது.
நேற்று வரை அந்த இடத்தில் நிரம்பிக் கிடந்த பரபரப்பையும், கலகலப்பையும், யாரோ மூட்டை கட்டி எடுத்துச் சென்றதைப் போல் அத்தனை நிசப்தமாய் இருந்தது
ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து விடுதியின், பள்ளியின் ஒவ்வொரு அங்குலமாய் கண்களால் வருடினான். சொந்தங்கள் அன்னியமாகும் போது, ஜடப் பொருள்களோடு தானே கூடுதல் பந்தம் உண்டாகிறது.
‘’ பிரசாத், பிரசாத்...என்ன செய்ற இங்க?’’,கேட்டவாறு வந்தார் மணி மாமா. வயது, மாமாவின் சுறுசுறுப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல்,தனது தாக்கத்தை அவரிடம் காட்ட இயலாமல், ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பதாய் தோன்றியது பிரசாத்திற்கு.
‘’ என்ன மாமா,கிளம்பலாமா?’’,கைகளை உதறியவாறு,கம்பீரமாய் எழுந்து நின்றவனைப் பார்க்க பெருமையாய் இருந்தது.அவனை முதன் முதலாய் பார்த்த காட்சி கண் முன் விரிந்தது.
பதிமூன்று வருடங்களுக்கு முன் இதே மைதானத்தில் தான் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. இது தங்கு உறைவிடப் பள்ளி என்பதால்,வருடத்திற்கு ஒரு முறை தான் வீடு செல்ல அனுமதிப்பார்கள். அன்று ஆண்டு இறுதி தேர்வு முடிந்து விடுமுறை துவங்கும் நாள். காலை முதலே கார்களின் வருகை தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநில நடிகை,நடிகர்கள்,அரசியல்வாதிகள்,தொழில் அதிபர்களின் பிள்ளைகளும் படிக்கும் இடம் என்பதால் அந்த இடமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
ஹேய், தேர் மை மாம் யா! “”அங்கிள் ஆம் ஹியர்”,ஹாய் டாட்,ஹவ் ஆர் யு? எங்குப் பார்த்தாலும் சந்தோஷக் கூவல்கள். ஒவ்வொரு காராய் பார்த்து தன்னை யாரும் அழைத்துச் செல்ல வராததில் கண்களில் நீர் கட்டத் தொடங்கியது நாலு வயது பிரசாத்திற்கு.
அப்போது அங்கு வந்த அவன் வகுப்பு ஆசிரியை மிஸ் ஹெல்டா, பொய்யாய் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் ’ஹாய், குட் பாய் ,எ ஸ்பெஷல் கிஃப்ட் ஃபார் யு”, என்றவாறு அவனை தூக்கிச் சென்று ஒரு பெரிய அறைக்குள் விட, அந்த அறை முழுவதும் பொம்மைகள், பொம்மைகள், பொம்மைகள், அதன் நடுவில் மணி சினேகமாய் சிரித்தபடி...
மணியைத் தான் ஏன் மாமா என்று அழைக்கத் தொடங்கினோம் என்பது இன்று வரைப் புரியாத புதிர் பிரசாத்திற்கு.
அந்த வருடம் மட்டுமல்லாது, வரும் வருடங்களிலும் தன்னைத் தேடி விசிட்டர் என்ற பெயரில் கூட யாரும் வராததும் ஒரு தொலைபேசி அழைப்பு கூட தனக்கு இல்லாததும் ஒவ்வொரு வருட விடுமுறையையும் மணி மாமாவுடன் கழிக்க நேர்வதும் அந்த இளம் உள்ளத்தை வாட்டத் தான் செய்தன.
அப்போதெல்லாம், மணியைத் தன் கேள்விகளால் துளைப்பான். மணியும் அவனை சாமர்த்தியமாய் சமாளிப்பார். ஆனால், ஆண்டுகள் செல்ல,செல்ல விபரம் புரிய ஆரம்பித்தது. கேள்வி கேட்பதைக் குறைத்துக் கொண்டான். தனிமைக் கூட்டிற்குள் நுழைந்துக் கொண்டான். தன்னை தானே கேட்டுக் கொள்ளத் தொடங்கினான்.
‘’நான் யார்? என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தவர் யார்? என்னைப் பார்க்க யாருமே ஏன் வருவதில்லை?
இவனைப் பொறுத்தவரை பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு செல்பவர்களுக்கும் இவன் பெற்றோர்க்கும் அதிக வித்தியாசம் இல்லை.குப்பைத்தொட்டிற்குப் பதில் இந்த பள்ளி. அவ்வளவுதான் .
ஆனால், இந்த பள்ளியில் அட்மிஷன் கிடைப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லையே! இங்கு அட்மிஷன் கிடைக்க பெரும் செல்வாக்கும் பண பலமும் வேண்டும்.அப்படியானால் தான் இல்லாதவன் இல்லை தானே?
தான் அனாதையும் இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு வருடமும் இவனது பெர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்டில் பெற்றோர் இடத்தில் ஆர் எனத் தொடுங்கும் ஒரு கிறுக்கலான கையெழுத்தை இவன் பார்த்திருக்கிறான்.
ஆக,தான் சொந்தங்கள் இல்லாதவன் இல்லை.அவர்களால் ஒதுக்கப்பட்டவன். யாருக்குமே வேண்டாதவன்,.
எத்தனை, எத்தனை, கேள்விகள் முளைத்து அவன் உயிரை எடுத்திருக்கும்? எத்தனை இரவுகள் உறங்காமல் தலையணை நனைய அழுதிருக்கிறான்? எத்தனை விதமாக யோசிக்க முடியுமோ அத்தனை விதமாகவும் யோசித்திருக்கிறான்...
ஒரு வேளை நான் ஏதேனும் நடிகையின் மகனாய் இருப்பேனோ? தன் நட்சத்திர மதிப்பிற்கு பங்கம் வரக்கூடாதென்று மறைத்து வளர்க்கிறாளோ? ஆடும் ஆட்டம் எல்லாம் ஆடி விட்டு கடைசிக் காலத்தில் தாங்கிக் கொள்ள தோள் வேண்டும் என்று தன்னை வளர்க்கிறாளோ?
அல்லது, தறுதலையாய் வளர்க்கப்பட்ட ஒரு பணக்கார வாரிசின் மறைக்கப்பட்ட கறை படிந்த கடந்த காலமா நான்?
ஈகோவில் பிரிந்த இருவேறு துருவங்களின் தன்னை மறந்த நொடியில் ஜனித்த பாவப்பட்ட பிள்ளையா நான்? அவரவர் மறுவாழ்க்கையைத் தேடிக் கொண்டு பெற்ற கடமைக்குப் படிக்க வைக்கிறார்களோ?
அல்லது, அல்லது,..என் நண்பர்கள் சந்தேகிப்பதைப் போல் என் பிறப்பே கேவலமானதா? நான் தந்தை பேர் தெரியாதவனா?
நினைக்கவே கூசியது. குமட்டிக் கொண்டு வந்தது. யாரோ கொடுத்த இந்த உடம்பை சுட்டுப் பொசுக்கலாம் என்று தோன்றியது.
தன்னைப் பற்றியே குமைந்து,குமைந்து இவனும் வெறும் பிடிவாதக்காரனாய்,முரடனாய், ஆங்காரம்கொண்ட சுயநலவாதியாய் மாறியிருந்திருப்பான். அல்லது,கெட்டு சீரழிந்திருப்பான்,மணி மட்டும் இல்லையென்றால்...
மணி, இந்தப் பள்ளியின் அலுவலகப் பொறுப்பில் இருப்பவர். விடுதியில் மாணவர்களின் தேவையைக் கவனிப்பதும் இவரது பணி. இராணுவத்தில் பொறுப்பான பதவி வகித்தவர். தன் குடும்பம் முழுவதையும் தன் கண்ணெதிரிலேயே ஒரு கார் விபத்தில் பறிகொடுத்துவிட்டு ,எதிலும் பற்றில்லாமல் திரிந்தவர் இந்தப் பள்ளியில் மன ஆறுதலுக்காக சேர்ந்தார்.
எங்கேயும் ஒரு வாரத்திற்கு மேலே தங்க முடியாம நாடோடி போல சுத்திக்கிட்டிருந்தவனை, ஒரே இடத்தில கட்டிப் போட்டிட்டியேடா?.. .தன்னை மீறி நெகிழ்ந்திருந்த ஒரு தருணத்தில் பிரசாத்திடம் பகிர்ந்துக்கொண்ட வார்த்தை இது..
இந்த மணி மாமா இவனுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்? நத்தை போல தனக்குள் ஒடுங்கியவனை மெல்ல,மெல்ல,வெளியே இழுத்திருக்கிறார். .விடுதியிலேயே இருந்து போரடிக்கும் என்பதால் ஆண்டிற்கொருமுறை ஒரு மாதம் சுற்றுலா அழைத்துச் செல்வார்.இராணுவத்தில் இருந்தவர் என்பதால் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் அவருக்கு அத்துப்படி.அப்படி செல்லும்போது தன்னைவிட வேதனையில் உழல்பவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை மெல்ல மெல்ல புரிய வைத்து கழிவிரக்கத்தில் இருந்து வெளிக் கொண்டு வந்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக ‘’வாழும் கலை” மையத்தில் அவனை சேர்த்து விட்டார்.அங்கு மூச்சுப்பயிற்சியில் தன்னை அடக்கும் வித்தை கற்றான். தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு ஆளுமைத் திறன் தானாய் வந்தது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் போனசாய்க் கிடைத்தது.
முன்பெல்லாம் இவன் எதிரிகள் வேறு எதிலும் இவனை வீழ்த்த இயலாமல் ,இவனை காயப்படுத்த எடுக்கும் ஒரே ஆயுதம் இவன் பிறப்பு பற்றிய கேள்வி தான்.இவனும் அந்த ஒரு ஆயுதத்திற்கு மிகவும் மிரளுவான். மூர்க்கத்தனமாய் மோதுவான்.காயப்படுத்துவான். காயப்படுவான்.
ஆனால் இப்போது அதையும் இயல்பாய் எடுத்துக்கொள்ள பழகி விட்டான். கண்ணோடு கண் பார்த்து மெலிதாய் சிரித்து விட்டு அந்த இடம் விட்டு அகல கற்றுக் கொண்டான்.
எதிராளியை காயப்படுத்தாத ஆயுதத்தால் பலன் இல்லை என்று இவன் எதிரிகளும் அதனை தூக்கி எறிந்து விட்டு இவனோடு கை குலுக்கினர். நட்பு வட்டம் பெருகியது.
இந்தப் பள்ளியின் தவிர்க்க முடியாத மாணவனாகி விட்டான் பிரசாத்.விளையாட்டுத் துறையிலும் ஜொலிக்கத் தொடங்கினான்.இவன் +2 ரிசல்டை பள்ளியே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.அகில இந்திய தர வரிசைப்பட்டியலில் இவன் பெயரும் இருக்கும் என உறுதியாய் நம்புகிறது.
எத்தனை வெற்றி கிடைத்தால் என்ன?அடி மனதின் ஆழத்தில் “நான் யார்? என்ற கேள்வி ஓய்வு நேரத்தில் பிடிவாதக் குழந்தையாய் பிராண்டத்தான் செய்தது. ஏமாற்றமும்,ஏக்கமும்,அவமானமும் கசடாய் சேர்ந்து ஆலகால விஷமாய் தொண்டையில் உருளத் தான் செய்கிறது.என்றாவது ஒரு நாள் அந்த வி.ஐ.பியைப் பார்க்க நேர்ந்தால் கொட்டிவிட,விஷத்தைக் கக்க ஒரு நாகம் தயாராய் உள் மனதில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
இவனைப் பொறுத்தவரை வி.ஐ.பி. என்பது முக்கியமான மனிதர் இல்லை.மிக,மிக ஒதுக்கி தள்ள வேண்டிய நபர்...
ஆம்..இவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.பெற்ற கடன் தீர்க்கும் அந்த நபரிடம் இனியும் கடன் பட இவன் தயாராய் இல்லை.தனக்கு எல்லாமாய் இருக்கும் மணி மாமாவுடன் ஒரு அறை எடுத்து தங்கிக் கொண்டு,பகுதி நேர வேலைக்கு முயற்சி செய்யப்போகிறான்.அதில் கிடைக்கும் வருமானம் கொண்டு மேலே படிக்கப் போகிறான்.மணியும் இவனுடன் வர சம்மதித்து விட்டார்.
ஆக எல்லாம் முடிந்து விட்டது.கிளம்ப வேண்டியது தான் பாக்கி. மூச்சிறைக்க ஓடி வந்தார் பியூன் சண்முகம்.’”பிரசாத்,உனக்கு விசிட்டர்”...., சொல்லி விட்டுப் போனவனையே பார்த்துக் கொண்டு, நம்ப முடியாமல் அதிர்ந்து நின்றான் பிரசாத்.
எந்த வார்தைக்காக இந்த காதுகள் வருடக்கணக்கில் தவம் செய்தனவோ,அந்தக் காதுகள் இப்போது ஒத்துழையாமை இயக்கம் நடத்தின.எந்த இயக்கமும் இல்லாது உலகம் உறைந்துப் போனது.கால்கள் நடக்க மறுத்தன.கேட்க வேண்டிய கேள்விகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டு வெளிவரத் துடித்ததில் முகம் சிவந்துப் போனது.
வரவேற்பு அறையில் இவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவன் கற்பனை செய்து வைத்திருந்ததைப் போல் வந்திருந்த நபர் கோட்-சூட் போட்ட மனிதரோ அல்லது பாப் தலையும் லிப்ஸ்டிக் வாயுமாய் உள்ள நாகரீக பெண்மணியோ அல்ல.
வெகு சாதாரண நடுத்தர வயது பெண்மணி. எளிமையான தோற்றம். உடுத்தி இருந்த விதமும், அமர்ந்திருந்த முறையும்,கம்பீரத்தையும்,நேர்மையையும் பறை சாற்றியது.“இவள் யாராய் இருக்கும் ? அருகில் நெருங்கியவனை அமரச் சொன்னாள் அவள். கடவுளே, இவளின் சாயல் ....எதையோ இவனுக்கு புரிய வைக்க முயல, படபடவென்று வந்தது,
“நான் ராஜம்மா ... உன்னைப் பிரசவித்தவள். “
கண்ணோடு கண்பார்த்து மெல்லப் பேசியவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் பிரசாத். அவள் மட்டும் தன்னை இவனின் அம்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தால் கிழி கிழி என்று கிழித்திருப்பான், அம்மா என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா என்று.
இப்போது அவளே பயாலஜிகல் மதர் என்று சொல்லிக்கொள்ளும்போது என்ன பேசுவது? வாய் அடைத்து நின்றான்.
“ தம்பி , நா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” கெஞ்சலாய் சொன்னவளை
அலட்சியமாய் பார்த்தான். “ இத்தனை வருடம் கழித்தா? “
“சில விஷயங்கள் முழுமையாய் புரிஞ்சிக்க படணும்னா சமயம் பார்த்து தான் பேசணும்” பதிலாய் சொன்னாள் வந்தவள்.
பிரசாத்திற்கு திகைப்பாய் இருந்தது. இவள் என்ன மனதை படிப்பவளா ?
இனி கவனமாய் இருக்க வேண்டும், தீர்மானித்துக் கொண்டான். நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அலட்சியமாய் கேட்பதாய் காட்டிக்கொண்டான்.
தனக்குள் சிரித்துக் கொண்டவளாய்,சொல்லத் தொடங்கினாள் ராஜம்மா
“நா தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமத்தை சேர்ந்தவ, அதிகம் படிக்காதவ. சாதாரண ஏழை குடும்பம். சமையல் தான் குடும்ப தொழில். அப்பா அம்மா இல்லாம சித்தப்பா தயவுல வளர்ந்தவ. எனக்குனு நெருக்கமான தோழியோ உறவோ இல்ல.எனக்கு எல்லாமே எங்க ஊர் மகாலிங்க சாமி தான்.’’’
உனக்குன்னு யாரும் இல்லாததுனால தான் என்னையும் அனாதையாய் விட்டாயா? வாய் வரை வந்ததை கேட்கப் பிடிக்காமல் வெறுப்பாய் பார்த்தான்.
அவனைப் புரிந்துக் கொண்டவளாய்,சிறிது நேரம் மௌனமாய் இருந்து விட்டு தொடர்ந்து சொன்னாள் அவள்.
அப்ப எனக்கு 25,26 வயசு இருக்கும் வீட்ல கல்யாண பேச்சு ஆரம்பிச்சு இருந்த சமயம். ஊர்ல எல்லா விசேஷங்களுக்கும் போய் சமைக்கிறோமே, நமக்கே கல்யாணமானு சின்ன சின்ன கனவுகள் வர தொடங்கி இருந்த நேரம். அப்பத்தான் ஒரு நாள் ஒரு வேலைக்குப் போயிட்டு ஊருக்கு திரும்பறப்ப நா வந்த பஸ் ஆத்துப் பாலத்தில விழுந்து நிறையப் பேர் அந்த எடத்திலேயே இறந்துட்டாங்க. நா ஆஸ்பத்ரியில கண் முழிக்கிறப்ப சம்பவம் நடந்து 3 நாள் ஆயிருக்கும். தலையில அடிபட்டு தண்ணீல அடிச்சி செல்ல பட்டு மயங்கி கிடந்தவள யாரோ கொண்டு வந்து ஆஸ்பத்ரியில சேத்து இருக்காங்கனு அப்புறமா தெரிஞ்சிக்கிட்டேன்.”
நீளமாய் சொல்லிவிட்டு மூச்சு வாங்கியவளை அயர்ச்சியாய் பார்த்தான் பிரசாத். இதை எல்லாம் எதற்கு என்னிடம் சொல்லிக்கொண்டு?
“இல்லப்பா ... நா இதை எல்லாம் விவரமா சொன்னாதான் நீ என் வயத்துல வந்தவிதம் பத்தி தெளிவா புரியும் உனக்கு”
உணர்ச்சி அற்ற குரலில் சொல்லிக்கொண்டே போனவளை திகைப்பாய் பார்த்தான். வயிற்றில் வந்த விதமா ? என்ன சொல்ல வருகிறாள் இவள்?
“ அப்பறம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிட்டேன். ஒரு அம்பது அறுபது நாள் கழிச்சு ஒரு வளகாப்புக்கு சமைக்க போயிருந்தேன். அங்க ஒரே வாந்தி மயக்கம். டாக்டர் கிட்ட போனப்ப தான் தெரிஞ்சிது நீ என் வயத்துல வளர்ற விஷயம்...
நா விபத்துல சிக்கி மயக்கமா கிடந்த நிமிடங்களை யாரோ உபயோகப்படுத்தி இருக்காங்கன்னு புரிஞ்சுது. அந்த செய்தி கேட்ட நிமிஷம் என் மனசுல தோணின உணர்வுக்கு என்ன பெயர்? எனக்கு தெரியல. ஆனா சத்தியமா ஆத்திரமோ அருவருப்போ தோணல. என் வாழ்க்கையே போயிடுச்சுன்னு கூட வருத்தம் வரல.ஆனா என்ன பண்றதுன்னு தெரியல ..
“நான் தலை சாய்ந்து அழவும்,மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கவும்.... எனக்குனு யார் இருக்காங்க, எங்க ஊரு மகாலிங்க சாமிய தவிர ? அவன் சன்னதிக்கு ஓடி வந்தேன். நா எந்த முடிவு எடுக்கறதுன்னு புரியாம அந்த சன்னதியில தலை சாய்த்து உட்காந்து இருந்தேன். ஜோதி மகாலிங்கமா ஜொலிச்சிகிட்டு இருந்தாரு சாமி. அப்ப யாரோ யார்கிட்டயோ,”” கிடைத்ததை தெய்வ பிரசாதமா ஏத்துக்கோ””ன்னு சொல்றது கேட்டது. இது தெய்வ அசிரீரியா எனக்கு தோணிச்சு.
“நா ரொம்ப சாதாரணமானவ, கிடச்சத அப்படியே ஏத்திக்கிட்டு வாழ்ந்தவ. இப்ப பாரேன்,அந்த விபத்தில நிறைய பேரு செத்துப்போனப்ப நான் மட்டும் ஏன் பொழைக்கணும்?அப்படியே பொழைச்சாலும் என் வயத்துல நீ ஏன் வரணும்?
நடந்த சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பில்லையோ அதே போல என் வயத்துல இருந்த நீயும் பொறுப்பில்லை தானே..அதனால உன்னை கொல்ற உரிமை எனக்கில்லை.சரியோ, தப்போ ,நடந்தத தெய்வ சங்கல்பமா ஏத்துக்கிட்டு உன்னை தெய்வப் பிரசாதமா நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.
அப்படி ஒரு எண்ணம் மனுசில வந்தவுடனே உடம்பும் மனசும்,அப்படியே றெக்கை கட்டி பறந்திச்சுப் பாரு!அதை எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கறதுன்னு எனக்குப் புரியலை!. உன்னை பெத்து வளர்க்கிறது மட்டும் தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன்.
ஆனால் எப்படி? எங்க ஊருல யாரும் நடந்ததை சொன்னால் நம்பவும் மாட்டாங்க..உன்னை வயத்துல வச்சிக்கிட்டு எப்படி கல்யாணம் பண்ணிக்கறது? கல்யாணம் பண்ணிக்காம இந்த ஊர்ல எப்படி உன்னை பெத்து,வளர்த்து.. இந்த சமூகத்தில,அதுவும் பதினேழு,பதினெட்டு வருஷத்திற்கு முன்ன,ஒரு பொண்ணா இதை எப்படி சாதிக்க முடியும்?.வழி புரியாம கையைப் பிசஞ்சிக்கிட்டு நின்னப்ப தான்.. , குழந்த கிருஷ்ணனை ஜெயில்ல இருந்து தப்பிக்க வச்சு யசோதாகிட்ட கொண்டு சேர்க்கிறதுக்கு கங்கை எப்படி வழிவிட்டிச்சோ,அதே மாதிரி எனக்கும் ஒரு வழி கிடச்சது.
மும்பைல இருக்கிற ஒரு வயதான தம்பதிய பொறுப்பா பாக்க ஒரு ஆள் வேணும்னும்,போக முடியுமான்னும் கேட்டு எனக்கு ஒரு அழைப்பு வந்தது.
உடனே ஒத்துக்கிட்டு மும்பை போனேன்.போன மறுநிமிடமே அந்தப் பெரியவங்க கால்ல விழுந்து எல்லா உண்மையையும் சொன்னேன்.அவங்க எதனாலயோ தெரியல அப்படியே என்னை நம்பினாங்க.
அவங்க ரெண்டுப் பேரையும் நான் உண்மையான அக்கறையோட கவனிச்சுக்கிட்டேன்.அவங்களும் சொந்த தாயா மாறி எனக்கு பிரசவம் பார்த்தாங்க.என்னைப் பொறுத்த வரை நீ எங்க ஊரு மகாலிங்க சாமியோடப் பிரசாதம். பிரசாதமா கிடைச்ச உனக்கு பிரசாத்னு பேர் வெச்சேன்.அருமையா வளர்த்தேன்.
ஆனால் நீ வளர வளர, எனக்கு பயம் வந்திச்சு.ஏன்னா, நம்ப மக்கள் சாப்பாடுக்கு வழி இல்லாமல் இருந்தாலும் இருப்பாங்களே தவிர,அடுத்தவங்க வாழ்க்கையில தலையிடாம இருக்க மாட்டாங்க.
கன்னி மேரி ஏசுவின் அவதாரத் தாய்.உடலாலும்,மனதாலும் கன்னி. அவள் தெய்வப் பிறவி.ஆனால் நான் அற்ப மனித பிறவி.உடலால் களங்கப்பட்டாலும், மனதால் நான் கன்னி தான்.மேரி மாதாவிற்கு யேசு போல எனக்கு நீ அத்தனை பவித்ரமானவன்.உன்னை மிக நல்ல விதமாய் வளர்க்க முடிவு செய்தேன்.
ஆனால் என் அருகில் நீ வளர்ந்தா இது சாத்தியமிலைனு தோணிச்சு.ஏன்னா, எனக்கு கணவன் என்று யாரும் வேண்டாம்.என் கற்பை யாருக்கும் நிரூபிக்கும் அவசியம் எனக்கு இல்லை.
ஆனால்,உனக்கு ஒரு தந்தை வேண்டுமே?இல்லாவிட்டால் இந்த உலகம் உன்னை குதறி எடுத்து விடுமே?எனக்கு கணவன் இறந்து விட்டான் என்று கற்பனை பாத்திரத்தை உருவாக்கி நான் விதவையாகலாம்.ஆனால் கற்பனை தான் என்றாலும் பிரசாத்...,நீ எனக்கு தெய்வமே தந்த பிரசாதம்பா. நீ மகாலிங்கப் புத்திரன்......இந்த நினைப்பு என் மனசுல ஊறி போனதால உன் தந்தை ஸ்தானத்தில் ஒரு மனிதப் பதரை வைக்க எனக்கு மனமில்லை.
நான் மட்டும் இருந்து, தந்தை இல்லாமல் இருந்தால் தானே இத்தனை பிரச்சனைகளும்?அதனால் தான் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்த முடிவிற்கு வந்தேன்.அமெரிகாவிலிருந்து வந்த அந்த முதிய தம்பதியினரின் மகன் துணை கொண்டு,மும்பையிலிருந்து வெகுதூரம் தள்ளி தமிழ்நாட்டிலிருந்த இந்த பள்ளியில் உன்னை சேர்த்தேன்.நான் உன் தாய் என்பதை முழுவதும் மறைக்க நினைத்தேன்.அதனால் தான் விடுமுறைக்கு கூட உன்னை அழைக்க வருவதை தவிர்க்க நினைத்தேன்.
நல்ல காரியத்திற்கு இயற்கை தானா வழி விடும்னுசொல்வாங்க.அதே போல உன்னை விடுமுறையிலே யார் பொறுப்புல விடறதுன்னு முழிச்சு நின்னப்ப,....அப்பவும் பாரேன்,அந்த தெய்வம் தான் ,என் ஒண்ணு விட்ட அண்ணன் மணிகண்டேசனை வெகு காலத்திற்கு பிறகு என் கண்ணுல காட்டிச்சு.,எல்லா உண்மையையும் சொல்லி உன்னை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைச்சேன்.
பிரசாத்தின் வாய் தன்னை அறியாமல் மணி மாமா...! என்று முனகியது. ஆம் என்றாள் ராஜம்மா.
மும்பையில அந்த பெரியவங்க ஒருத்தர் பின் ஒருத்தராக இறந்து போக,அவர்கள் இருந்த சிறிய வீட்டை அவங்க மகன் நான் அந்த பெரியவங்களை நல்லா பார்த்துக்கிட்டதுக்கு நன்றிக்கடனா என் பேர்ல எழுதி வச்சார்.நா அதிலே சிறிய அளவில ஒரு அப்பள கம்பனிய என்னை மாதிரி ஆதரவில்லாத பொண்ணுங்க துணையோட தொடங்கி நடத்திக்கிட்டு இருக்கேன். உன்னை இந்த பள்ளியில படிக்க வைக்கற அளவுக்கு அதிலே இருந்து வருமானம் வருது.
என் அண்ணாவின் வளர்ப்பில நீ வைரமா ஜொலிக்கரத தொலைவில் இருந்து ரசிச்சேன் .மண்ணில் இட்ட விதை செடியாகி,மரமாவதை ரசிப்பதை போல் உன் வளர்ச்சிக்கு பெருமைப் பட்டேன்.ஆனால் நெருங்க முடியாமல் நான் தவித்த தவிப்பு...கடவுளே...நான் மட்டுமா?நீயும் தான்.உன் தவிப்பு,வேதனை,அவமானம் எல்லாம் தெரிஞ்சும் ஒண்ணுமே செய்ய முடியாம..கல்லு மாதிரி சே ... என்ன ஜென்மம் நான்..
இப்ப வந்து ஏன் இதையெல்லாம் சொல்றன்னு நினைக்கிறாயா?இப்போது சொல்லா விட்டால் இனி எப்போதும் சொல்ல முடியாமல் போய் விடுமோன்னு பயமா இருக்குப்பா.அதோடு நான் சொல்றத புரிஞ்சிக்கற அளவுக்கு நீயும் வளர்ந்து விட்டாயே?
ஆனால் ஒண்ணுப்பா.இதெல்லாம் என் பக்கத்து நியாயம் தான்.உன் பக்கதிலேர்ந்து பாக்கறப்ப இதெல்லாம் அநியாயம்னு தோணலாம்.உனக்கு நியாயமா கிடைக்க வேண்டிய அன்பை, பாசத்தை காட்டாம தவிக்க விட்ட துரோகம்னு தோணலாம்.தோணலாம் என்ன? அது தான் உண்மை.அதனால நீ என்ன முடிவெடுத்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன்.
நீளமாய் மூச்சுவாங்கிக் கொண்டு சொல்ல நினைத்ததையெல்லாம்,சொல்லி முடித்து விட்டு தீர்ப்பிற்கு காத்திருக்கும் குற்றவாளி போல் கூனி குறுகி அமர்ந்திருப்பவளைப் பார்க்க கல் மனதில் ஈரம் கசியத் தொடங்கியது.
தெரிந்தே செய்த தவறினால்,பிறந்த குழந்தையையே குப்பைத் தொட்டியில் வீசி செல்பவர்களுக்கு மத்தியில்,தன் மேல் தெறித்த சாக்கடையான என்னை கழுவி களைந்து விட்டு செல்லாமல்,தெய்வம் தந்த வரமாய்,சந்தனமாய் , தன்னை ஆராதிக்கும் இவளை என்னவென்று சொல்ல?
இத்தனை வருடங்களில் தனிமையில் எத்தனை கணைகளை இவள் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்? பாவம்,தனக்கென ஒன்றுமே இல்லாமல்,தன் வாழ்க்கையையே இவனுக்காய் தொலைத்து விட்டு,தன் மகன் என்ற உரிமை கூட கோராமல் ஒதுங்கி நிற்கும் இவளுக்காக என்னால் என்ன செய்ய முடியும்?
இப்படிப்பட்ட உத்தமி என் தாய் என்றால் இவளுக்காக 12 வருடங்கள் என்ன 20 வருடங்கள் கூட அஞ்சாதவாசம் இருக்கலாமே?
இத்தனை நேரம் பதட்டமில்லாமல் பேசினாலும், தன் தரப்பு நியாயம் என்று எதையும் வாதிடாமல்,நடந்ததை அப்படியே சொல்லி விட்டு தான் அவனுக்காக செய்த தியாகம் எதையும் நினைக்காமல்,தன்னால் அவன் பட்ட வேதனையை மட்டும் சகிக்க முடியாமல், கழிவிரக்கத்தில் கண்ணீர் மல்க அமர்ந்திருப்பவளை பார்க்க பார்க்க நெஞ்சை ஏனோ பிசைந்தது.
தேக்கி வைத்த பல வருடத்து கசப்பு,இனிப்பாய் மாறி தொண்டைக்குள் இறங்கியது.மீதி கசப்பு கண்ணீராய் மாறி அருவியாய் பொழியத் தொடங்கியது.
தன்னை வளர்ப்பதற்காகவே ,தேய்ந்து தேய்ந்து சந்தனமாய் மணப்பவளை, தான் எப்படி கௌரவிப்பது?இப்படி அழைப்பதை தவிர வேறு என்னால் பெரிதாக என்ன செய்து விட முடியும்?
உணர்ச்சிப்பெருக்கில் உதடுகள் கோண, கத்தலாய், கதறலாய்,அந்த அறையே கிடுகிடுக்கும்படி, வெளி வந்தது அந்த மூன்று எழுத்து வார்த்தை.
“”அம்மா,அம்மா,....அம்மா...
இத்தனை நாள் செய்த தவத்தின் பலன் கிடைத்த மகிழ்வில்,மனதில் மகாலிங்க சாமியை ஆராதித்துக்கொண்டே,நடுங்கும் விரல்களால்,மகனை வாரி எடுத்து மடியில் சாய்த்துக் கொண்டாள் ராஜம்மா...!
சாந்தி குமார்.
____________________________________________________________________________________
#155
43,060
3,060
: 40,000
62
4.9 (62 )
shivaunimm01
nithyanithin98
cricvik
Excellent
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50